சென்னை: மசோதாக்கள் மீதான சிக்கல்களை ஆராய வேண்டும் என்றும், இதனால் சட்ட சிக்கல் வருமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக எம்எல்ஏவுமான எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கூறினார்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்களை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர், முதலமைச்சர் பதில் அளித்தனர். தொடர்ந்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை எற்படுத்தியது, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு சட்டபேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இந்த தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தீர்மானத்தின்மீது உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை பேச வேண்டும். பேச முன்வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். இந்திய குடியரசுத் தலைவர் பற்றியோ, இந்திய நாட்டில் உள்ள நீதி மன்றங்களை பற்றியோ அல்லது மாண்புமிகு ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை.. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது பரபரப்பு விவாதங்கள் நடைபெற்றன.
இந்த தீர்மானத்தின்மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவரு மான எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆராய வேண்டும் என்றவர், “சட்ட மசோதாக்கள் மீது With Held என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆளுநர் இந்த 10 சட்ட முன்வடிவுகளையும் நிராகரிக்க வில்லை, நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்றார்.
ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் தீர்ப்பு வருவதற்கு முன்பே தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை கூட்டியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பலாமா? மீண்டும் அனுப்பப்படவுள்ள 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். 3 ஆண்டுகளுக்கு பிறகு மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் கூறுவதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது என்றவர், எந்த காரணமும் இல்லாமல் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பினால் அதனை சட்டமன்றம் மறுஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி “With Held என்றால் மசோதா நிலுவையில் இருப்பதாக, அர்த்தம் இல்லை, திருப்பி அனுப்பப்பட்டு விட்டது” என்றார்.
பின்னர்பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநருக்கோ, குடியரசுத்தலைவருக்கோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும் போது, With Held என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” என்றார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, வழக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் சிறப்புக் கூட்டத்தை கூட்டி மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக பதிலளித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது பேரவை நிறைவேற்றிய மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும் என்பதற்காக இப்போது சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.