மதுரை: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அரசு ரூ. 10லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கும் திமுக அரசு, இதுபோன்ற எதிர்பாராத விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கும் ரூ.10லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
விருதநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் எற்படுவத வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பட்டாசில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.