கொரோனா, கரோனா, கோவிட்19  என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வரும், கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம் உலக நாடுகளையே பீதிக்குள்ளாக்கி உள்ளது.

வைரஸ் தொற்று பரவால் தடுக்க எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், வந்துபார் என சவால்விட்டு தனது கோர முகத்தை காட்டி லட்சக்கணக்கானோர் உயிர்களை பலி வாங்கி வருகிறது.

இதன் கொட்டத்தை அடக்க அடிக்கடி, கையை கழுவுங்கள், முகத்தை முகக்கவசம் கொண்டு மூடிக்கொள்ளுங்கள், தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள், நோய் எதிர்ப்பு சக்தி பானங்கள், காய்கறிகள், சத்தான உணவுகள் எடுங்கள் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி இந்தியாவில் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இருந்தாலும் நோய் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ஒருபுறம் அரசியல் கட்சிகள், தங்களது சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றி வந்தாலும், மற்றொருபுறம் இந்திய பொருளாதாரமே கவிழ்ந்து விட்டது, ஏழை மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நாசமாகி விட்டது என்ற கூக்குரலும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில், மாநில தலைவர் சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து இருப்பதால், தமிழகஅரசு மேலும் 15 நாட்கள் முழு ஊரடங்கை, பல தளர்வுகளுடன் 4 மாவட்டங்களுக்கு மட்டுமே மீண்டும் அமல்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 5முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் தோல்வியி லேயே முடிந்திருப்பதாக சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும், மருத்துவ நிபுணர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

15 நாட்கள் கடைகளை அடைக்க வணிகர்கள் முன்வந்தும் அதை ஏற்றுக்கொள்ளாத தமிழகஅரசு தற்போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை திறந்துகொள்ளலாம் என்ற தளர்வுடன் முழு ஊரடங்கு என்று கூறி வருகிறது.

முழு ஊரடங்கு 19ந்தேதி முதல் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட நாட்களில் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள முடியுமே? அப்படி இருக்கும்போது 8 மணி நேரம் கடைகளை திறக்க ஏன் அனுமதி கொடுக்கப்பட வேண்டும்…

வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்தால் போதுமே…

ஆனால், இதுபோன்று எதையுமே சிந்திக்காமல்,  தற்போது பல தளர்வுகளுடன் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஜூன் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்து உள்ளது.

இந்த ஊரடங்காவது முழுமையாக நிறைவேற்றப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது கேள்வியும் உண்மையே.

ஏற்கனவே சென்னை உள்பட மாவட்டங்களில் 5 முறை  ஊரடங்கு அமல்படுத்தியும், அவைகள் தோல்வி அடைய காரணம் என்ன? கொரோனா பரவல் தீவிரமாக பரவ காரணம் என்ன?  இது குறித்து தமிழகஅரசு சிந்தித்ததா என்பது தெரிய வில்லை.

பொது மக்கள் அரசின் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறார்கள், முகக்கவசம் அணி மறுக்கிறார்கள் அதனால்தான் கொரோனா தொற்று பரவுகிறது என்று அவர்கள்மீது குற்றச்சாட்டுக்களை கூறும் தமிழகஅரசு, அதை ஏன் தடுக்க முன்வரவில்லை?

மக்கள் ஏன் அரசின் சட்டத்தை மதிக்க மறுக்கிறார்கள்? வணிகர்களின் நிலை என்ன? சாமானிய மக்களின் வாழ்வாதாரம் என்ன? காவல்துறையின் பணி என்ன? கொரோனா பரவல் குறித்து மக்கள் நெருக்கமான பகுதிகளில் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு நடத்தியதா? என்றால்… இவை அனைத்திற்கும் பதில் ஜீரோ…தான்.

சென்னை உள்பட முக்கிய நகரங்களில், இதுவரை எந்தவொரு உயர் அதிகாரியோ, மருத்துவ நிபுணர்களோ நேரடியாக கள ஆய்வு செய்யவில்லை என்பது 100க்கு 100 சதவிகிதம் உண்மையே.

ஒருசில பொதுஇடங்களில் மட்டும் கொரோனா கேப்ம் போட்டு, சிலரை அழைத்து சோதனை நடத்துவதுபோல பாசாங்கு செய்து புகைப்படங்கள் எடுத்து அதை ஊடகங்களுக்கு அனுப்பி, விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது என்பது வேதனையான விஷயம்.

பெரும்பாலான இடங்களில் அரசு பணியில் அமர்ந்திருக்கும் தற்காலிக ஊழியர்கள் வீடு வீடாக, ஏதோனா ஒப்புக்கு சப்பானியாக, காய்ச்சல் இருக்கிறதா? சளி இருக்கிறதா என்று வீட்டு உரிமை யாளர்களிடம் கேட்டு தகவல் பெறுகிறார்கள்… அதுவும் மெயின் சாலைகளில் மட்டுமே… அடுக்குமாடி குடியிருப்புகளிலோ, மக்கள் நெருக்கமான தெருக்களிலோ அதுவும்கூட கிடையாது…

எந்தவொரு குடும்பத்தினரும், தங்களுக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கிறது என்பதை அரசு அலுவலர்களிடம், தானாக வந்து எப்படி தெரிவிப்பார்கள்? ஏன் இது அரசு அலுவலர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் புரியவில்லை…

உயிர்ப்பயம் அனைவருக்கும்தான்.. அது மறுப்பதிற்கில்லை… இருந்தாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களுடன் களத்திற்கு வந்து பணி செய்ய வேண்டியதும் அவசியம்…

கொரோனா விவகாரத்தில் தமிழகத்தின் தற்போதைய சூழல் இதுதான்.. இந்த நிலையில்தான் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மேலும் 12 நாள் முழு ஊரடங்கு என்று பல்வேறு தளர்வுகளுடன் தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு முழு ஊரடங்கு எங்கே உள்ளது? தமிழகஅரசு மீண்டும் மக்களை ஏமாற்றி உள்ளது.

ஊரடங்கின்போது ரூ.1000 நிவாரணம் வேறு… இதை பெற விரும்பும் மக்கள் யாராவது சமூக விலகலை கடைபிடிக்க முன்வருவார்களா? இப்படி பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக்க தமிழகஅரசு சில முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது…

இதை கடைபிடித்தால், சென்னை போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலையும்,  முழு ஊரடங்கையும் முழுமையாக செயல்படுத்த முடியும்…

முதலில் அரசின் உத்தவை மீறுவோர் மீது காவல்துறையின் நடவடிக்கை தீவிரமாக இருக்க வேண்டும். அதாவது “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் ” என்ற பழமொழிக்கேற்ப காவல்துறையின் பணி சற்று கடுமையாக்கப்பட வேண்டும்

முக்கிய சாலைகள் மூடப்பட்டு, வாகன ஒட்டிகள் வெளியே சுற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். இது மட்டுமின்றி நகரத்தின் ஒவ்வொரு உட்புற சாலைகளுக்கும் இருசக்கர காவல் பேட்ரோல் மூலம் சுமார் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாக ரோந்து சுற்றி வர வேண்டும்

முக்கிய சாலைகளில் உள்ள கடைகளில் சமூக விலகல், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிப்பதில் வணிகர்கள் விதிகளை மீறினால், தயவு தாட்சணயம் இன்றி கடைகளை அந்த நிமிடமே மூடி சீல் வைக்கப்பட வேண்டும், ஊரடங்கு முடியும் வரை எக்காரணம் கொண்டும் திறக்க அனுமதி வழங்கக்கூடாது.

வீதிகளில் ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் சாலையோர ஸ்நாக்ஸ் கடைகள், சிறு ஓட்டல்களையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் திறக்க தடை விதிக்கப்பட வேண்டும். தொற்று பரவலுக்கு முக்கிய காரணங்களில் சாலையோர கடைகளும் ஒன்று என்பதை அரசு கவனித்தில் கொள்ள வேண்டும்.  இதை தடுக்க வேண்டுமெனில், காவல்துறையினர் ரோந்து வர வேண்டியது அவசியம்..அதை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் வணிகர்கள் சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், இளைஞர் சங்கங்கள், ஜாதிய சங்கங்கள், விளையாட்டு அமைப்பு சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோ சங்கங்களும்  உள்ளன.

இதுபற்றிய  அனைத்தும் அந்தந்த பகுதி காவல்துறையினருக்கு தெரிந்திருக்கும்.

சங்க நிர்வாகிகளை காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும்  அழைத்து பேசி, அவர்கள் மூலம் தெருக்களின் மக்கள் நடமாடுவதை தவிர்க்க அரசு முன் வரலாம்.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த குடியிருப்போர் சங்கங்களை அரசு ஊக்குவிக்கலாம், அவர்கள் மூலம் நிவாரணங்கள் வழங்கலாம், அதுமட்டுமின்றி நோய் தடுப்பு,  சிகிச்சை, சோதனை போற்றவற்றையும் மேற்கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி பல பகுதிகளில் போலீஸ் பிரண்ட்ஸ் அமைப்பினர் பலர் உள்ளனர். அவர்களைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முன்வரலாம்.

ஏனென்றால் சென்னையில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சங்கத்தலைவர்களின் அறிவுரையை அந்தப்பகுதி மக்கள் ஒருபோதும் மீற முன் வரமாட்டார்கள் என்பதே உண்மை.

எனவே,  கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகஅரசு, அரசியல் நடத்தாமல், மேலே குறிப்பிட்டுள்ளபடி நடவடிக்கைகளை உடனே எடுக்க முன்வந்தால் மட்டுமே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் தமிழகஅரசு, சென்னை மாநகராட்சி, காவல்துறையினர் இணைந்து குடியிருப்போர் சங்கத்தினரை சந்தித்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்தால், சென்னையில் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை…

வணிகர் சங்க அமைப்புகள், குடியிருப்பு சங்கங்கள், காவல்துறையினர் இணைந்து செயலாற்றினால் சென்னையில் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்…

தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் முன்வருமா?