தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சபாநாகர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பும் பணியும் நடந்துவருகிறது.

இந்த நிலையில்  ஏற்கெனவே காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதி உட்பட 19 தொகுதிகளுக்கு  இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர்  தனபால் இன்று உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர்.  இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில்   ஜக்கையன் மட்டும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் விளக்கம் அளிக்காத மீதமுள்ள  18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணமாக  தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர், கீழ்க்காணும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் இந்த தகுதி இழப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அவர்களில் பலர், “ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிகள் இணைந்தாலும் இன்னும்  இன்னமும் கொடி, சின்னம், பெயர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், எந்த கட்சியிலிருந்து 18 எம்எல்ஏக்கள் தாவினார்கள்?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், “18 எம்.எல்.ஏக்கள் தகுதி இழந்ததாகவே இருக்கட்டும். ஏற்கெனவே ஜெயலலிதா மறைவால் காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதி உட்பட 19 தொகுதிகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுமா” என்றும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், ” உள்ளாட்சித் தேர்தலுடன் இந்தத் தொகுதிகளுக்கான தேர்தலையும் நடத்தலாமே” என்றும் நெட்டிசன்கள் பலர் தெரிவித்து வருகிறார்கள்.