இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார் என தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் தற்போது, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஆட்சி காலம் அக்டோபர் இறுதியில் முடிவடைய உள்ளது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டும்.
இந்த நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். அதனுடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான தேதிகளும் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், பீகார் தேர்தலுன் காலியாக உள்ள தொகுதிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது. இதனால், இன்று அறிவிக்கப்பட உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணை அறிவிப்புடன், இந்த இடைத்தேர்தல்ககளுக்கான அறிவிப்பும் வெளியாகும் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.