சென்னை:
நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள மணி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார்.
இதற்காகச் சாலைகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் அந்த வழியாக வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்.
இதனால் தனது நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த நீதிபதி, இதுபற்றி உள்துறை செயலாளர் பிரபாகர் விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து காணொலியில் ஆஜரான பிரபாகரிடம், எதனடிப்படையில் தடுத்து நிறுத்தினீர்கள்? எனக் கேட்ட நீதிபதி, முதலமைச்சர், அமைச்சர்களுக்குத் தரும் மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்த உள்துறை செயலாளர், எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.
Patrikai.com official YouTube Channel