மதுரை:

டைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு உடைந்து இணைந்த அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா நடத்திய கூட்டத்தில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என பேனர் வைக்கப்பட்டிருந்தது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என்று செய்தி யாளர்கள் மத்தியில் கூறி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாள் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அச்சடிக்கப்பட்ட பேனர் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களை அதிமுக பெற்றுள்ள நிலையில், ஆட்சியின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகாலமும் பிரச்சினையின்றி செல்லும் என எதிர்பார்த் திருக்கும் நிலையில், அவர்களுக்குள்ளேயே மீண்டும் முட்டல் மோதல் ஏற்பட்டு வருவது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்லில் போட்டியிட்ட தேனி மக்களவை தொகுதி வேட்பாளரும் ஓபிஸ் மகனுமான ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இது அதிமுகவினர் மத்தியில் மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் மகன் சத்யன் படுதோல்வி அடைந்த நிலையில், அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த ராஜன் செல்லப்பான செய்தியாளர்களிடம் தனது உள்ளக்குமுறலை கொட்டினார்.

அதிமுகவுக்கு இரட்டை தலைமை இருப்பதால், நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர், எனவே  ஜெயலலிதா போல திறமையான ஒற்றை தலைமை தேவை என்றும் அதற்காக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் உள்பட பலர் களம் இறங்கி விவகாரம் சூடுபிடித்தது. இதையடுத்து கட்சி விவகாரம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என ஈபிஎஸ், ஓபஎஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த சூடு ஆறுவதற்குள்,  மதுரை திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்ட கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில்,  முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் மேலும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் ஆலோசனை கூட்டம் நடெபற்றது. இதில் வைக்கப்பட்ட பேனரில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பேனரை செய்தியாளர்கள் படம் பிடித்ததை தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிமுக நிர்வாகிகள் பேனரில் காகிதத்தை ஒட்டி மறைத்தனர். ஆனாலும்,  இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி  பரவி கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஓபிஎஸ் மகனின் பெயர், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறாத நிலையிலேயே, தேனி தொகுதி எம்.பி. என்று அச்சிடப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டு சர்ச்சையானதை தொடர்ந்து, அது நீக்கப்பட்டது.

அதையடுத்து, தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதும், மத்திய அமைச்சர் ரவீந்திர நாத் என்றும் நோட்டீஸ் அடிக்கப்பட்டு, அதுவும் சர்சையை மேலும் வலுவாக்கியது.

இந்த நிலையில், தற்போது பேனரில் முதல்வர், துணைமுதல்வர் பதவி குறித்து அச்சிடப்பபட்டு உள்ளது அதிமுகவின் உள்கட்சி மோதல் தீவிரமடைந்து வருவதை வெளிக்காட்டி உள்ளது. திட்டமிட்டே, பேனரில் முதல்வர், துணைமுதல்வர் பதவி அச்சிடப்பட்டு உள்ளதாக ஒரு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ்ஐ மீண்டும் முதல்வராக்க அவரது  ஆதரவாளர்களால் திட்டமிட்டு,  இதுபோன்ற செயல்களை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது…