லண்டன்: தற்போது நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை, அடுத்த 2023ம் ஆண்டு முதல் 4 நாட்கள் கொண்ட போட்டியாக நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில், உலகளவில் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்பட்டுவரும் பல்வேறு நெருக்கடிகளையடுத்தே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டி-20 போட்டிகளுக்கான மவுசு அதிகரிப்பு, தனியாக தொடர்களை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுவரும் அனுமதி, ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் போன்றவை முக்கிய காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

டெஸ்ட் போட்டியை 4 நாட்களாகக் குறைப்பதன் மூலம், மொத்தமாக 335 நாட்கள் கிடைக்குமாம். எனவே, விரிவான திட்டமிடல்களை மேற்கொள்ள வழியேற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் என்பதற்கு பதில் 98 ஓவர்கள் வரை வீசப்படக்கூடுமாம்!

இதற்கு முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே மற்றும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து – அயர்லாந்து ஆகிய அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகள் 4 நாட்கள் போட்டியாக சோதனை முறையில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.