சமீபத்தல் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் காலியாக இருந்த 503 பணியாளர்கள் பதவிக்கு தமிழக்ததை சேர்ந்த 4 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு வடமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டனர். கொரோனா முடக்கம் காலத்திலும், அவர்கள் பல இடங்களில் இருந்து திருச்சி வந்து பணி தொடர்பான ஆவன சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி இடத்தை பெற்றது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருச்சி குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது,
இந்த தேர்வாணையம், பொது அறிவிப்பின் மூலம் அனைத்து மண்டல ரெயில்வே மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோருகிறது. இதில் 21 வாரியங்களில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பிக்க லாம். விண்ணப்பிக்கும் ஒருவர் சென்னை, திருச்சி, அல்லது சேலம் போன்ற ஏதேனும் குறிப்பிட்ட ஒரு வாரியத்தை தேர்வு செய்தபின் வேறு எந்த வாரியத்துக்கும் அவர் விண்ணப்பிக்க முடியாது.
ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் தேர்வை நடத்தி வருகிறது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒவ்வொரு நிலையும் கணினி மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படுகிறது. தகுதி அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கணினி வழியாக தமிழ் உள்பட 15 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
காலி பணியிடங்களுக்கு, தனிப்பட்ட எந்த மாநிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடத்தப்படுவது கிடையாது. தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சென்னைக்கு மட்டுமல்லாமல், வேறு ஆர்.ஆர்.பி. வாரியங் களுக்கும் விண்ணப்பித்துள்ளனர். உதாரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.2 லட்சம் பேர் தமிழ்நாடு அல்லாது தென் மேற்கு ரெயில்வேயில் உள்ள ஆர்.ஆர்.பி. பெங்களூருக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அப்ரண்டிஸ் பயிற்சி வகுப்பு என்பது பணிமனை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் பயிற்சி அளிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்று. அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை உறுதி என்கிற நிலை ரெயில்வேயில் கிடையாது. எனினும் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில்வே வாரியம், 20 சதவீத அப்ரண்டிஸ்களை முதல் நிலை பணிகளுக்கு தேர்வு செய்யலாம் என ஒப்புதல் வழங்கியது. இதன் அடிப்படையில் 597 காலிபணியிடங்கள் அப்ரண்டிஸ்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த வகையில் 3,627 விண்ணப்பங்கள் அப்ரண்டிஸ்களிடம் இருந்து வரவேற்கப்பட்டது. அதில் 2,839 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். அவர்களுள் 272 பேர் உடல்தகுதி பெற்றனர். இறுதியில் 54 பேர் தகுதி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அன்று ‘லோகோ பைலட்டுகள்’ மற்றும் ‘டெக்னீஷியன்கள்’ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு 21 வாரியங்களுக்கு பொதுவான அறிவிப்பாகவே வெளியிடப்பட்டது. லோகோ பைலட்டுகளுக்கான கல்வித்தகுதி ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டப்படிப்பு ஆகும். ஆனால் டெக்னீசியன்களுக்கு ஐ.டி.ஐ படிப்பு மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் ‘டெக்னீசியன்’ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் அல்ல.
அந்த அடிப்படையில் சென்னை ஐ.சி.எப். மற்றும் திருச்சி பொன்மலை பணிமனை உள்பட காலி பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து 51 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை சென்னை வாரியம் உறுதிசெய்துள்ளது. மொத்தம் 3,218 விண்ணப்பதாரர்கள் துணை ‘லோகோ பைலட்டுகள்’ மற்றும் ‘டெக்னீசியன்’ பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 17 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர். டிப்ளமோ மற்றும் என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதி பெறாததற்கு காரணம், ஐ.டி.ஐ. படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே ‘டெக்னீசியன்’ வேலைக்கு தகுதியானவர் ஆவர்.
அதே வேளையில், தமிழகத்தில் இருந்து 53 சதவீதம் பேர் துணை ‘லோகோ பைலட்டுகள்’ பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ளனர். தெற்கு ரெயில்வேயின் பணியாளர் நலப்பிரிவு துறையின் உரிய செயல்முறைக்கு பின்னரே 541 பேர் திருச்சி பொன்மலை பணிமனையின் டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.