சென்னை:

பெண் செய்தியாளர்கள் குறித்து தரம்தாழ்ந்த பதிவைப் பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக  உள்ள நிலையில் நாளை அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்ட நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை போலீஸ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் தலைமறைவான எஸ்.வி.சேகர், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார்.

அவருக்கு சென்ன்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் ஜாமீன் தர மறுத்துவிட்டார். அவரை காவல்துறை கைது செய்யவும் தடை இல்லை எனவும் உத்தரவிட்டார்.

தற்போது எஸ்.வி. சேகர் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக காவல்துறை முனைந்தால் அவரை கைது செய்ய முடியும். ஆனால் காவல்துறை சார்பில் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் ஜாமீன் கோரிய மனு, நாளை விடுமுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது அவருக்கு ஜாமீன் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.