சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மத்தியஅரசு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதுடன், பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் நேற்று வெளியிட்டது. இதையடுத்து, இன்று அவசர ஆலோசனை நடைபெற உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகிறது. தமிழகஅரசு தொலைக்காட்சி மூலம் கல்வி போதித்து வருகிறது. இந்த முறையிலான கல்வியால், மாணாக்கர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவாக கேட்க முடிவதில்லை என்றும், பல பாடங்கள் புரியவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஊரடங்கில் 90 சதவிகிதம் அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 15ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்தியஅரசு அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று (5ந்தேதி) அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.