மும்பை: டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக துவக்க வீரர் வாய்ப்பைப் பெற்ற ரோகித் ஷர்மா, பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆடத் தொடங்கிய ரோகித் ஷர்மா, இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். மேலும், இதுவரை அவர் துவக்க வீரராக களமிறங்கியதே இல்லை.
தற்போது, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா ஆடவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதன்முறையாக துவக்க வீரர் என்ற வாய்ப்பைப் பெற்றுள்ளார் ரோகித் ஷர்மா.
இந்நிலையில்தான் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடி தான் தகுதியானவர்தான் என்று நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. தென்னாப்பிரிக்க அணியின் ஃபிலாண்டர் வீசிய பந்தில் டக் அவுட்டானார் ரோகித்.
மொத்தம் 4 நிமிடங்கள் மட்டுமே களத்தில் நின்று, வெறும் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து பெவிலியன் திரும்பிவிட்டார். இதன்மூலம் இவரின் மீதான கேள்விக்குறி வலுவாகியுள்ளது. இவரின் இடத்தைப் பிடிக்க ஏற்கனவே பலர் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ரோகித் ரன் குவிக்கவில்லை என்றால், அவர் டெஸ்ட் அணியிலிருந்தே மூன்றாவது போட்டிக்கு முன்னதாக நீக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ரோகித் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், கோலி – ரோகித் இடையிலான போட்டியில், கோலியின் கரங்கள் தற்போது வலுவாக ஓங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.