ஐதராபாத்,

வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில்  முஸ்லிம்களுக்கான  ஒதுக்கீட்டை உயர்த்தினால், தெலுங்கானாவிலும் ஒரு யோகி வெளிப்படுவார் என அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவர்  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசை எச்சரித்துள்ளார்.

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவிதத்திலிருந்து 12 சதவிதமாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாஜகவின் முக்கிய பிரமுகரும், எம்எல்ஏவுமான பிரபாகர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்பட்டால் உத்தரபிரதேசத்தில் யோகி வெளிப்பட்டது போல், தெலங்கானாவிலும் ஒரு யோகி தோன்றுவதை தடுக்கமுடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், முஸ்லிம்கள்  மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான மசோதா மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  விரைவில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக ஏற்கனவே எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.