டெல்லி: உ.பி. பஞ்சாப் உள்பட 5மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்து கிறது. இந்த ஆலோசனையின்போது, மத்திய சுகாதாரத்துறையும் கலந்துகொள்கிறது.
2022ம் ஆண்டு தொடக்கத்தில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப். உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு 2022ம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்த மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள ஆளுங்கட்சி களும், ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டு, பிரசார வியூகங்களை வகுத்து, பிரசாரங்களை முடுக்கி விட்டு உள்ளன.
இந்த பரபரப்பான சூழலில் ஒமிக்ரான் தொற்றும் பரவி வருவதால், சட்டமன்ற தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. அலகாபாத் உயர்நீதிமன்றமும், உ.பி. மாநிலம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை தள்ளி வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும் என்றும், இதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்த நிலையில், தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான தொற்று பரவல் நிலைமை மற்றும் 5 மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை இன்று (திங்கள்கிழமை) சந்தித்து விவாதிக்கவும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மாநிலங்களில் கொரோனா நிலைமை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து முடிவு எடுப்பது குறித்தும், இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.