நியூயார்க்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்படலாம் என ஒரு மூத்த சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார மையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதையொட்டி திருப்பதி, மெக்கா, வாடிகன், போன்ற புனிதத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் 2020 போட்டிகள் நடைபெற உள்ளன. ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் இந்த போட்டிகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் கலந்துக் கொள்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் வேளையில் இந்த போட்டிகளைத் தள்ளி வைக்கலாம் என யோசனை கூறப்பட்டது.
இதற்கு ஜப்பான் அரசும் சர்வதேசஒலிம்பிக் குழுவும் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் இந்த போட்டிகளைத் தள்ளி வைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். ஆயினும் சர்வதேச ஒலிம்பிக் குழு இது குறித்த முடிவை அறிவிக்கவில்லை. இந்த போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாகக் கனடா அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் மூத்த உறுப்பினரான டிக் பவுண்ட் நேற்று செய்தியாளருக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “தற்போதுள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை வரும் ஜூலை மாதம் நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே இந்த போட்டிகளைத் தள்ளி வைக்கலாம் எனக் குழு ஆலோசித்து வருகிறது.
இந்த போட்டிகளை எதுவரை தள்ளி வைப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24 ஆம் தேதி அன்று நிச்சயம் தொடங்காது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளி வரும்.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு செய்தி தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், “ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனது எண்ணத் தெரிவிக்கவும் அல்லது குழுவின் முடிவு பற்றி கருத்து சொல்லவும் உரிமை உண்டு.” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.