சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு போன்ற விஷயங்கிள் குறித்து அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வரும் நிலையில், மதிமுகவும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிகள் அமைந்துள்ளன. இந்த கூட்டணிக்குள் பல கட்சிகளை இணைக்க திமுக, அதிமுக போட்டிபோட்டு வருகின்றன.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மதிமுகவும், திமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதி குறித்தும், மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுகவில் இணைய இருப்பது குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் அவைத் தலைவர் துரைசாமி, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பவத், வைகோவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு, வாய்ப்பு அளித்தால் வைகோவுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.