விஜய் டிவியில் 2017-ம் ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’ . 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

2017-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ‘பிக் பாஸ் 2’, கடந்த வருடம் (2018) ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. கடந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க,16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.இதில், வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் ஐஸ்வர்யாவு தத்தாவுக்குக் கிடைத்தது.

இந்நிலையில், மூன்றாவது சீஸன் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிவிட்டதால், அதைப்பற்றிய பல செய்திகள் பரவி வருகின்றன.

‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் என சாந்தினி தமிழரசன், ரமேஷ் திலக், டி.ராஜேந்தர், ராதாரவி, கஸ்தூரி உள்ளிட்ட பலரின் பெயர்களும் வெளியாகின. ஆனால், சம்பந்தப்பட்ட அனைவருமே இதை மறுத்துள்ளனர்.

இன்னொரு பக்கம், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து’ என தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாகியுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கமலின் தேர்தல் பிரச்சாரம் கடந்த இரண்டு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வீடு, அலுவலகம், தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள தனியார் விடுதி ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அவர்மீது சில இடங்களில் வழக்குகளும் பதிவாகியுள்ளன. எனவே, இந்த விஷயம் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியிலும் எதிரொலிக்கலாம், கமலுக்குப் பதிலாக வேறொருவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் என தகவல் பரவியுள்ளது .