சென்னை:

திமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேமுதிகவும் இந்த கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று சந்தித்து பேசுகிறார்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக நேரடியாகவும், திரைமறைவிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அதுபோல விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இடம்பெறுமா? என கேள்விக் குறி எழுந்தது. ஆனால், பாமக அதிமுக  இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைப்போம் என்று அறிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, அதிமுக பாஜக கூட்டணியில் சேர மாற்று கட்சிகளை வலைவீசி வருகிறது. ஏற்கனவே பாமக அதிமுக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேமுதிகவையும் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இதற்கான பேச்சு வார்த்தைகள் திரைமறைவில் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக பேச்சு வார்த்தை நடத்த பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் மதியம் 2 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, தேமுதிக வுடனான கூட்டணி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.