கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் முடங்கிப்போன பொருளாதாரத்தை மீட்பதற்கு, மோடி அரசின் சார்பில் ரூ.20 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டு பல நிதிசார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதில், ரூ.1 லட்சம் கோடி மதிப்பில், வேளாண் கட்டமைப்பிற்கென்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய விவசாயத்திற்கு இத்தகைய அறிவிப்பினால் பலனில்லை என்று கூறப்படுகிறது.
இது வெறுமனே காகிதத்தில் உள்ள ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்புதான் என்றும், இன்றைய சூழலில் உண்மை விவசாயத்தை உயிர்ப்பிக்க இந்த அறிவிப்பு உதவாது என்றும் விமர்சிக்கப்படுகிறது.
கடந்த 2004-2005 முதல் 2013-2014 ஆண்டு காலகட்டத்தில் வேளாண் வளர்ச்சி 4% என்பதாக இருந்தது. அதுவே, மோடி அரசு பதவியேற்ற பின்னர், 2014-2015 முதல் 2018-2019 காலகட்டங்களில் 2.9% என்பதாக சுருங்கிப்போனது.
நாட்டில் வேளாண்மை தொழில்தான் மிகப்பெரிய தனியார் துறை. ஆனால், இத்துறையின் மீது விதிக்கப்படும் மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளால், இத்துறை தனக்கான நியாயமான வளர்ச்சியை எட்ட முடியவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு உடனடி பண நிவாரணமே இப்போதைய தேவை என்றும், அவர்களுக்கு இதுபோன்ற ஒருமுறை-மாத்திரை அறிவிப்புகள் தேவையில்லை என்றும் கூறுகின்றனர் விமர்சகர்கள்.