வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தகுதிநீக்கத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின்(காங்கிரஸ்) கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ள நிலையில், மேலவையான செனட்டில் தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கீழவையில் எதிர்க்கட்சிக்கு பலம் இருப்பதால், அங்கே பதவிநீக்க தீர்மானத்தை ஆதரித்து 227 வாக்குகளும், எதிர்த்து 179 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, பிரதிநிதிகள் சபையைவிட செனட் சபைதான் அதிக வலிமையானது.
அங்கே மொத்தம் 100 உறுப்பினர்கள் மட்டுமே உண்டு என்றாலும், அவர்களுக்கான உரிமைகள் வலுவானது.
அந்த அவையில், தற்போதைய நிலையில், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். டிரம்ப்பின் பதவியை பறிக்க வேண்டுமானால் இந்த அவையில் 66 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழ வேண்டியது அவசியம்.
ஆனால், அதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை என்றே தெரிகிறது. எனவே, டிரம்ப் தனது பதவிகாலம் முழுவதையும் எந்த சிக்கலுமின்றி நிறைவுசெய்வார் என்றே தெரிகிறது.
முந்தைய பில் கிளிண்டன் ஆட்சியில், அவர் மீதான பாலியல் குற்றத்திற்காக, இதுபோன்ற பதவிநீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் செனட் சபையில் தோற்றது நினைவிருக்கலாம்.