வாஷிங்டன்

ணையத்தில் 26.7 கோடி முகநூல் பயன்பாட்டாளர்களின் பெயர் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் முகநூல் விவரங்களைத் திருடி அவற்றைத் தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது.  இந்த தகவலை ஒப்புக் கொண்ட முகநூல் அதிபர் மார்க் சுபர்பெர்க் இதற்காக மன்னிப்பு கோரினார்.  அதன் பிறகு முகநூல் நிர்வாகம் தனது பயன்பாட்டாளர்கள் விவரங்களில் இருந்து தொலைப்பேசி எண்ணை நீக்கியது.

இந்நிலையில் இம்மாதம் 4 ஆம் தேதி இணையத்தில் சுமார் 26, 71,40,436 முகநூல் பயன்பாட்டாளர்கள் விவரம் வெளியானதாகப் புகார்கள் எழுந்தன.  இந்நிலையில் இந்த விவரங்கள் பல தளங்களில் ஊடுருவர்களால் டிசம்பர் 12ஆம் தேதி வெளியானது.   இந்த தகவல் மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த விவரங்களில் பயன்பாட்டாளர்களின் பெயர், தொலைப்பேசி எண், முகநூல் பெயர் உள்ளிட்டவை இருந்தன.   இந்த பயன்பாட்டாளர்களில் அதிக அளவில் அமெரிக்கர்கள் இருந்துள்ளனர்.

இந்த தகவல் வெளியான தளங்கள் குறித்து  இணையச் சேவை அளிப்போருக்குப் புகார்கள் அளிக்கப்பட்டன.  அதையொட்டி அந்த தளங்கள் முடக்கப்பட்டு அனைத்து விவரங்களும் நீக்கப்பட்டுள்ளன.    ஆயினும் இந்த விவரங்கள் ஏற்கனவே பலரால் நகல் எடுத்திருக்கப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.   இந்த விவரங்களில் தொலைப்பேசி எண்கள் உள்ளதால் இவை சுமார் ஒன்றரை வருடம் முன்பே திருடப்பட்டிருக்கலாம் என ஒரு பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சைபர் குற்றம் ஆய்வாளர்கள், முகநூல் பாதுகாப்பு அமைப்பில் ஏதோ குளறுபடி உள்ளதால் இந்த விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம்   இவ்வாறு திருடப்பட்ட விவரங்கள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களிலும் பகிரப்பட்டுள்ளன.   இதனால் இந்த பயன்பாட்டாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளது.   இந்த விவரங்கள் மூலம் மேலும் பல தனிப்பட்ட தகவல்களையும் ஊடுருவாளர்கள் கண்டறிய வாய்ப்பு உண்டு” எனத் தெரிவித்துள்ளனர்.