டில்லி:
தலைநகர் டில்லியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீருக்கும் ஆம்ஆத்மி வேட்பாளருக்கும் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது.
இந்த நிலையில் தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், தான் பொதுஇடத்தில் தூக்கில் தொங்க தயார் என்று கவுதம் கம்பீர் சவால் விடுத்துள்ளார்.
7 லோக்சபா தொகுதிகளை கொண்ட டில்லியில்,கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான அதிஷி போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அதிஷி மீது கீழ்த்தரமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பாஜக துண்டுபிரசுரம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில் அதிஷி அழுதுகொண்டே தன்மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கினார். இது தொடர்பாக பாஜக வேட்பாளர் கம்பீர் மீது புகார் பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தலைநகரில் சூடுபிடித்துள்ள நிலையில், அதுபோல துண்டு பிரசாரம் தான் ஏதும் வெளியிடவில்லை என்று மறுத்த கவுதம் கம்பீர், நான் அந்த தவறை செய்ததாக கெஜ்ரிவால் நிரூபித்தால் தான் போட்டியில் இருந்து விலகுவதாகவும், பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் அரசியலைவிட்டு கெஜ்ரிவால் விலகத் தயாராக இருக்கிறாரா? என சவால் விடுத்துள்ளார்.