டில்லி
மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இட ஒதுக்கீடு சட்டம் தனியார் கல்வி நிலையங்களுக்கு பொருந்தாது என கூறப்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன. அதன் பிறகு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்து சட்டமாக்கப்பட்டுளது.
தனியார் கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த 2011 ஆம் வருடம் தொடர்ந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அத்துடன் அனைத்து கல்வி நிறுவனங்களும் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவும் நிலுவையில் உள்ளது. ஆகையால் இந்த 10% இட ஒதுக்கீடு முறை சட்டமானாலும் அது அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மத்திய அரசு வரும் 2019-20 கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதன் மூலம் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேட நினைப்பதாக அதிகார பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு சமீபத்திய அறிவிப்பில், இந்த சட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் நீதிமன்றங்களில் இது குறித்த நிலுவையில் உள்ளதால் தனியார் கல்வி நிறுவனங்கள் தீர்ப்பு வரும் வரை இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது சந்தேகம் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.