டெல்லி:
கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க மாநிலஅரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள், நகரங்களை அதன் பாதிப்புக்கு ஏற்ப, தனிமைப்படுத்தி, அந்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்தியஅரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி,கொரோனா பரவல் தீவிரமான பகுதிகள், நடுநிலை பகுதிகள், குறைந்து வரும் பகுதிகள் என 3ஆக பிரித்து, அதற்கேற்ப சிவப்பு,மஞ்சள், பச்சை என தனி மண்டலமாக பிரித்து, கண்காணிப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாகவும் கூறிப்படுகிறது.
அதன்படி, அதிதீவிரமான கொரோனா பரவல் பகுதி சிவப்பு பட்டியலில் இடம் பெறும் என்றும், அந்த நகரங்களில் வரும் 30ம் தேதி எந்தவொரு சேவையும் தொடங்கப்படாது என்று கூறப்படுகிறது.
மஞ்சள் பட்டியல் நகரங்களில் சில கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும்,
பச்சை மண்டலத்தில் தடையின்றி போக்குவரத்து தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா அதிகரித்து வரும், சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் சிவப்பு பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாளை பிரதமர் மாநில முதல்வர்களுடன் நடத்தும் ஆலோசனையைத் தொடர்ந்தே, இதுகுறித்து இறுதி அறிவிப்பு வெளியாகலாம் அல்லது, நாடு முழுவதும் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.