சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதுபோல, ஓபிஎஸ் வலியுறுத்திய அதிமுக வழிகாட்டுதல் குழு தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் யாரும் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை முதல்வர் வேட்பாளர் தேர்வு எடப்பாடிக்கு ஆதரவாக இருந்தால், ஓபிஎஸ் மீண்டும் ஜெ.சமாதிக்கு போய் தியானம், தர்மயுத்தம் போன்ற ஏதாவது செய்து, பரபரப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை தவிர்க்கும் வகையில், மெரினாவில் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாககூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் முன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்பது குறித்தும், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது பற்றியும் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால்,. வழிகாட்டு குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார்?, அந்த குழுவுக்கு என்னென்ன அதிகாரம் இருக்கும் என்பது குறித்தும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் மூத்த அமைச்சர்கள் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருக்கும் முக்கிய தலைவர்கள் இடம்பெற வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், இன்று அதிமுக தரப்பில் இருந்து, ஏற்கனவே அறிவித்தபடி, ஏதாவது அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிமுகவின் முடிவு ஓபிஎஸ்-க்கு எதிராக இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே, ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் நடத்தி, நெருக்கடி கொடுத்த சம்பவம் போல் மீண்டும் எதாவது சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என்பதில் எடப்பாடி தரப்பினர் கவனமாக இருந்து வருகின்றனர்.
அதன்காரணமாக, ஜெயலலிதா நினைவிடம் பகுதியில் போலீசார், பொதுப்பணி துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்திற்குள், அ.தி.மு.க., தொண்டர்கள் நுழைய முடியாதபடி, கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையம் அருகே, பாதுகாப்பு பணிக்கு, போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அதே நேரத்தில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் பட்சத்தில், முக்கிய தலைவர்கள் வந்து செல்வதற்காக, சிறப்பு வழிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.