சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கும் சென்னைவாசிகளை காப்பாற்றும் வகையில் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக 36 படகுகளை வாங்கி தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டிற்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலகட்டத்தில், அதிகளவு மழையை தமிழ்நாட்டின் வட பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெறுகின்றன. இதன் காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. பல பகுதிளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சாலைகள் முழுவதும் வெள்ளத்தால் சூழ்வதால் போக்குவரத்தும் தடைபட்டு வருகிறது.
இதை தடுக்க, 2021ம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் வெள்ளத்தடுப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், மழை வெள்ளம் வந்தால், அதை முழுமையாக தடுக்க முடியாத நிலையே உள்ளது. காவல்வாய்கள் முழுமையாக தூர் வாராததும், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையின் பல பகுதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 3வது வாரம்தான் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணிகள் முழுமையாக நிறைவடைய 3 மாதங்கள் வரை ஆகலாம். ஆனால், கால்வாய் தூர்வாரும் பணிகளை கோடை காலத்தில் செய்வதைவிட்டு, தற்போது, பருவமழை காலத்தின்போது செய்வது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (செப் 30ந்தேதி) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் வெள்ளம் ஏற்பட்டவுடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவாக செயல்பட்டு, ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ப தேவையான நீர் இறைக்கும் இயந்திரம் மர அறுப்பான்கள், ஜே.சி.பி, படகுகள் போன்ற கருவிகள் தாழ்வான பகுதிகள் அருகில் முன்கூட்டியே நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது, அதில் மண்டலம் 3-க்கு ஒரு படகும், மண்டலம் 14-க்கு இரண்டு படகுகளும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள படகுகள் மற்ற மண்டலங்களுக்கும் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டு களாக நடைபெற்ற வெள்ளநீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த ஆண்டு சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை வாங்கி தயாராக வைத்துள்ளது சென்னை மாநகராட்சி.