சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளைகளை சென்னை உள்ளிட்ட நாட்டின் இதர முக்கிய நகரங்களில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளதோடு, அதற்கான முயற்சிகளும் தொடங்கியுள்ளன.
நாட்டின் ஒரு கோடியில் இருக்கும் டெல்லியில் உச்சநீதிமன்றம் அமைந்துள்ளதால், அதன் கிளைகளை சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களிலும் அமைத்து, மக்களின் எளிதான அணுகலுக்கு வழிவகை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் ஒன்று.
இதுதொடர்பாக, சமீபத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வில்சனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை, வில்சன் சந்தித்து, நாட்டின் முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற கிளைகளை அமைப்பதன் தேவையை வலியுறுத்தினார்.
தொலைவு காரணமாக, நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து, மேல்முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு வருவதேயில்லை. குறிப்பாக, இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக, தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகள் உள்ளன.