டான்டன்: வங்கதேச – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியை மதிப்பிட்டு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறுகின்றனர் சில கிரிக்கெட் விமர்சகர்கள்.

வங்கதேசம் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஆட்டம் சற்று ஆச்சர்யகரமானதுதான். 321 ரன்கள் என்ற இலக்கை வெறும் 41.3 ஓவர்களில் எடுத்து ஊதித்தள்ளிய வங்கதேச அணியின் செயல் பலரையும் திக்குமுக்காடச் செய்யக்கூடியதுதான்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நிலை அப்போட்டியில் அவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால், வங்கதேச அணியின் வெற்றியில் நாம் வேறொன்றையும் பார்க்க வேண்டியுள்ளது. கன்சிஸ்டன்சி இல்லாத மற்றும் குறிப்பாக உலகக்கோப்பைகளில் சொதப்பும் அணிகளைத்தான் வங்கதேசம் வென்றுள்ளது என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

மேலும், வங்கதேசத்தைப் பொறுத்தவரை, உளவியல் வலிமை இல்லாத அணிகளையும் காலிசெய்துவிடும். அந்த அணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதேபோன்று எச்சரிக்கையுடனும் கன்சிஸ்டன்சியுடனும் இருக்கும் வலிமையான அணிகளை வங்கதேசத்தால் எப்போதும் வெல்ல முடிந்ததில்லை என்பதும் உண்மை.

இந்த உலகக்கோப்பையில், மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே தனது வலிமையை நிரூபித்தது. அதற்கடுத்த போட்டிகளில், அந்த அணி தனது கன்சிஸ்டன்சியை சுத்தமாக இழந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணியைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஐசிசி தொடர்களில் சொதப்புவதையே தங்களின் உளவியல் பலவீனமாகக் கொண்டவர்கள்.

நியூசிலாந்து அணியுடன் சிறிய தோல்வியைத்தான் வங்கதேச அணியினர் சந்தித்தார்கள் என்றாலும், நியூசிலாந்தும் உலகக்கோப்பையில் சொதப்புவதை வாடிக்கையாகக் கொண்ட அணிதான்.

அதேசமயம், இங்கிலாந்து அணியுடன் வங்கதேசம் சரணடைந்ததையும் நாம் இங்கே பார்க்க வேண்டும். அவர்கள் இன்னும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுடனும் மோத வேண்டியுள்ளது. இலங்கை – வங்கதேசப் போட்டி மழையால் ரத்தாகிவிட்டது. அந்தப் போட்டி நடைபெற்றிருந்தால், இலங்கை வெல்வதற்கான வாய்ப்பே அதிகமாக இருந்திருக்கும்.

கடந்த காலங்களில் வெகுசில போட்டிகளில் இந்திய அணி, வங்கதேசத்திடம் தோற்றிருக்கலாம். ஆனால், அந்த தோல்விகள் அபூர்வ ரகத்தைச் சேர்ந்தவையே. அதுவும் தற்போதைய சூழலில் இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்தலாம் என்று சொல்வதெல்லாம் சற்று மிகையான கணிப்பே. அதேசமயம், இந்திய அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேண்டுமானால் கூறலாம்.