அம்மான்: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிச்சுற்றுப் போட்டியில், 75கிகி எடைப்பிரிவில், இந்தியாவின் ஆஷிஸ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதிபெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதிபெறுவதற்கான ‘சுற்று-16’ போட்டியில், கிர்கிஸ்தான் நாட்டின் பெக்ஜிகித்தை எதிர்த்து மோதினார் இந்தியாவின் ஆஷிஸ்.
இப்போட்டியில், 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமான முறையில் வென்று, காலிறுதிக்கு தகுதிபெற்றார் இந்திய வீரர். இத்தொடரில், அரையிறுதி வரை தகுதிபெறும் பட்சத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறலாம்.
காலிறுதிப் போட்டியில், இந்தோனேஷியாவின் மைக்கேல் ராபர்ட் மஸ்கிதா என்பவரை எதிர்கொள்கிறார் ஆஷிஸ்.
இந்தியா சார்பாக, பெண்கள் பிரிவில், சிம்ரன்ஜித் கெளர்(60 கிகி) மற்றும் சாக்ஸி சவுத்ரி(57 கிகி) ஆகியோர் ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.