சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில், நடப்பு கல்வியாண்டு (2020-21) 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக 10, 11,12வது வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, தேர்வுகள் நடத்தப்படுவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில முக்கிய தேர்வுகள் கால தாமதமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில், பொதுத்தேர்வை, மேலும், இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் மத்தியஅரசிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், தற்போது தனியார் மற்றும் அரசு பள்ளிகள் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகின்றன. அரசு பள்ளிகளில், இதுவரை எந்தவொரு பருவத்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகள் பருவத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது.
மேலும் தமிழக கல்வித்துறை 30 சதவிகித பாடங்களை குறைத்து உள்ளதாக கூறினாலும், அதுகுறித்து சரியான முறையில் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட மாதிரி பாடங்கள் நடத்தப்படவில்லை என்றும் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடமானது, எந்தவித தாக்கத்தையும் மாணவர்களிடையே ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் பெற்றோர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச்சுக்கு பதில் மே மாத கடைசி அல்லது ஜூனுக்கு தள்ளி வைக்கலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் மே மாதவாக்கத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டால், அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்தின்போது, மாணவர்கள் பாடங்களை படிப்பதில் சிரமம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
அதுபோல, உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகளுனா ‘நீட், ஜே.இ.இ., நாட்டா, கியூசெட் என பல்வேறு நுழைவு தேர்வுகளை எதிர்கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து நிபுணர் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்ய தமிழகஅரசு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், தேசிய தேர்வு முகமை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.