புதுடெல்லி: ஊடக சுதந்திரம் குறித்து, அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டு நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மனைவி.
உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தைப் பற்றி பதிவுசெய்வதற்காக, அம்மாநிலத்திற்குச் சென்றார் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன். ஆனால், அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ. அரசின் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் சித்திக்.
அவரை தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருக்கும் சூழலில், அவரின் மனைவி இந்தக் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். மோடி ஆதரவு வலதுசாரி பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, தற்கொலையை தூண்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்டதும், மோடி அரசின் அமைச்சர்கள் பலர் உடனடி வாய்மொழி கண்டனத்தைப் பதிவுசெய்தனர். தற்போது அவருக்கு ஜாமீனும் வழங்கிவிட்டது உச்சநீதிமன்றம்.
ஆனால், சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டது குறித்து அந்த அமைச்சர்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. கேரளாவைச் சேர்ந்தவரும், மத்திய இணையமைச்சருமான முரளிதரன்தான், இதுதொடர்பான வாய்மொழி கண்டத்தை மட்டும் பதிவுசெய்தார்.
ஆனால், சித்திக் கப்பனை விடுவிப்பதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. கேரள பத்திரிகையாளர் சங்கம்தான் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இத்தகைய நிகழ்வுகளையெல்லாம் முன்வைத்துதான் தனது குற்றச்சாட்டைப் பதிவுசெய்துள்ளார் சித்திக் கப்பனின் மனைவி.