கட்டாக்
சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் தமது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி இழப்பீடு கோரிய பெண்ணை அவர் கணவரே காட்டிக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் ஒடிசா மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லட்சக்கணக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளான ரயிலில் தனது கணவர் பயணித்ததாகவும், நடந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் நாடகமாடியுள்ளார். அதை அந்தக் கணவரே காவல்துறையில் தெரிவித்து பொய்யை அம்பலமாக்கினார்.
ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தாவின் கணவர் பிஜய் தத்தா. கடந்த ஜூன் 2-ஆம் தேதி விபத்துக்குள்ளான ரயிலில் இருந்ததாகவும் விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கீதாஞ்சலி கூறினார்., சவக்கிடங்கில் இருந்த ஏதோ ஓர் உடலைத் தனது கணவரின் உடல் என்றும் அவர் அடையாளம் காட்டினார். அதிகாரிகள் சோதனையின்போது சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் கொண்டனர்..
கீதாஞ்சலியின் கணவர் பிஜ்ய தத்தா தனது மனைவி மீது மணியா பண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாகப் பொய் கூறியதாகவும், பொதுப் பணத்தை அபகரிக்க முயன்றதற்காக மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி உள்ளார். இந்த வழக்கை அக்காவல் நிலைய அதிகாரி பாலசோர் மாவட்டம் பாஹநாகா காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளார்.