சென்னை:  கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்காக சமூக நலவாரியம் செயல்பட்டு வந்தது. அதற்கான அமைச்சர்களும் இருந்து வந்தனர். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், சமூக நலத்துறை வாரியம் கலைக்கப்பட்டு, கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என பெயர் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுகிறது என்பதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

இந்த வாரியத்தின் மூலம்,   கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் பிரச்சனைகளை களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.