சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 29ந்தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்  மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (29ந்தேதி) வடகிழக்கு பருவமழை தொடங்கும்  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதலே மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சுமார் 7மணிக்கு மேல் பலவராக மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் சுமாரன மழையும், பல இடங்களில்  பலத்த மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது

சென்னையில்  கோயம்பேடு, வடபழனி, அடையாறு, மெரினா, மயிலாப்பூர், மணலி, திருவொற்றியூர், அண்ணாநகர், மாதவரம், மூலக்கடை, ரெட்ஹில்ஸ், திருவான்மியூர், ஈசிஆர் சாலை உள்பட பல  இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், பணிக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். ஏற்கனவே மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாவல், சாலைகள் கடுமையாக சேதடைந்து சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில், இன்றைய மழை காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கு மேலும் அவதியை  கொடுத்துள்ளது.