சென்னை:
சென்னையில் இன்று மாலை வடசென்னையின் பல பகுதிகளில் உள்பட மாநகரரின் பல பகுதி களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெப்பத்தில் வாடி வந்த மக்கள் சற்றே மகிழ்ச்சி அடைநதனர்.
வெப்பசலனம் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது மிதமான மழை வரை கனமழை வரை கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
வடசென்னை பகுதிகளான பெரம்பூர், மூலக்கடை, மாதவரம், ரெட்ஹில், அண்ணா நகல், வடபழனி போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு, வால்பாறை, சின்கோனா (கோவை) ஆகிய பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மத்திய வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடற்பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.