சென்னை: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேலூர் கோர்ட்டில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை, வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று காவல்துறைக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் துரைமுருகன் தரப்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது என்று கூறப்பட்டது. இதை அடுத்து, வழக்கை மேலும் விசாரிப்பதைத் தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
வேலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த சொத்துக் குவிப்பு வழக்கை, திடீரென சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான காரணங்கள் குறித்துக் காவல்துறை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. எனவே, வழக்கை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான முழுமையான விளக்கத்தைக் காவல்துறை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் கேள்விகளும், நவம்பர் 24ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காவல்துறை அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து, வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.