அமெரிக்கா, இந்தோனேஷியா, இஸ்ரேல், குவைத், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் எதிலும் அந்நாட்டு அதிபர் அல்லது பிரதமரின் படம் இடம்பெறுவது இல்லை.

ஆனால், இந்தியாவில் 750 ரூபாய் செலுத்தி போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கு வழங்கும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது ஏன் ? என்று கேட்டு கேரள உயர்நீதி மன்றத்தில் பீட்டர் மியாலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக மேலே குறிப்பிட்ட நாடுகளில் வழங்கப்படும் சான்றிதழின் நகலை சமர்ப்பித்துள்ள அவர், ஒரு நபரின் மருத்துவ பதிவேடு என்பது அவரது அந்தரங்க விவகாரம் அதில் அவரின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்கம் எதையும் பதிவிட முடியாது என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த தகவலறியும் உரிமைச்சட்ட ஆர்வலரான பீட்டர் மியாலிபரம்பில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிய காரணத்தால், ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூ. 750 பணம் செலுத்தி தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.

தான் பணம் கொடுத்து போட்டுக்கொண்ட தடுப்பூசி விவரம் அடங்கிய மருத்துவ சான்றிதழில் தனது ஒப்புதல் இல்லாமல் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் அரசாங்கம் தனக்கு தடுப்பூசி போட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது ஏற்புடையது இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.பி. சுரேஷ் குமார் இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.