மும்பை:
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போதுபேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையிருந்தால் பாஜக தலைவர்கள் ஏன் பிரசாரத்திற்கு வர வேண்டும் என்று கேள்வி விடுத்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு பாஜக, சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளது.
அங்கு சூறாவளி தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக, பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக அமோக வெற்றி பெறும் என்றும், பாஜக வெற்றிபெற்று முதல்வர் பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக வருவார் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் என்சிபி வேட்பாளர் பிரகாஷ் தாரேவுக்காக நடைபெற்ற பேரணியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
இந்துத்துவ சித்தாந்தவாதியான சாவர்க்கருக்கு பாரத் ரத்னா மரியாதை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை குறித்து விமர்சித்தவர், இது பாஜகவின் “தேர்தல் வித்தை” என்று குறிப்பிட்டார். பல இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் அமித்ஷா, கோலாப்பூர், சதாரா மற்றும் சாங்லி ஆகிய பகுதிகளில் ஆகஸ்டு மாதம் வெள்ளம் சூழ்ந்தபோது ஏன் வருகை தரவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசு, மாநிலத்தில் எரியும் பல பிரச்சினைகளை “புறக்கணித்து”, மக்களின் கவனத்தை அவர்களிடமிருந்து திசை திருப்புவதாக குற்றம் சாட்டியவர், மறைந்த என்.சி.பி தலைவர் ஆர் ஆர் பாட்டீல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக அவர் மேற்கொண்ட தூய்மை பிரச்சாரத்தை பாராட்டியும் பேசினார்.