தடுப்பு மருந்துகளை பெறுவது தொடர்பாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, நேரடி சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில, சீரம் நிறுவனம் அறிவித்துள்ள விலை வேறுபாடு, பல்வேறு குழப்பமான கேள்விகளை ஏற்படுத்துவதாய் உள்ளது.

சீரம் நிறுவன அறிவிப்பின்படி, ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை, மத்திய அரசுக்கு ரூ.150க்கும், அதேயளவு மருந்தை மாநில அரசுக்கு ரூ.400க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், எந்த அடிப்படையில், இந்த விலை வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், மருந்துகளை மொத்தமாக, அதிகளவில் தயாரிக்கும்போது, உற்பத்தி செலவு கணிசமாக குறையும். அப்படியான சூழலில், வழக்கத்தைவிட, குறைந்த விலையில் மருந்தை வழங்கலாமே தவிர, விலை கூடுவதற்கான நியாயமான காரணங்கள் இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஏனெனில், ஆஸ்ட்ராஸெனகா மருந்தை உற்பத்தி செய்யும் செலவைவிட, கோவிஷீல்டு மருந்தை உற்பத்தி செய்யும் செலவு அந்நிறுவனத்திற்கு குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனம், தனது மருந்து உற்பத்தி திறன் அளவை, அதிகரிக்க உள்ளதாயும், உற்பத்தியில் பாதியளவை மத்திய அரசுக்கு வழங்கிவிட்டு, மீதியுள்ளவற்றை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளது அந்நிறுவனம்.

மாறுபட்ட விலை நிர்ணயங்களின் மூலம், நாடு மிகுந்த நெருக்கடியில் இருக்கும் சூழலில், சீரம் இன்ஸ்டிட்யூட் என்ற தனியார் நிறுவனம், லாப நோக்கில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.