ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-3
இளையராஜா, திரைப்படங்களுக்கு மட்டும், இதுகாறும் ஏறத்தாழ 2500 மணி நேரங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று நாம் பார்த்தோம் !
இதில், குறிப்பிடத் தகுந்த விஷயம் ஒன்று உண்டு !
அன்று, பல இசையமைப்பாளர்களுக்கு – இசைக் கோர்வையாளர்கள், அதாவது “பிஜிஎம்” அமைப்பவர்கள் என்பவர்கள் தனியாக இருந்தார்கள். இன்னமும் அப்படித்தான் பலர் இயங்குகிறார்கள் !
ஆனால், இளையராஜாவின் பாடல்களுக்கு அவரே பின்னணி இசையையும் அமைப்பார். மட்டுமல்ல, ஒவ்வொரு நோட்டும், அதன் காலப் பிரமாணமும் கூட, அவர் கைப்பட எழுதியதாகத்தான் இருக்கும். அதற்கு மேல் ஒரு இம்மி கூட சேர்த்து வாசித்து விடக் கூடாது என்பார்.
அந்தளவுக்கு தன் இசையின் மேல் அவருக்கு ஒரு கன்விக்க்ஷன் இருந்தது !
ஒவ்வொரு இசைக்கருவிக்கும், லோ – மிட் – ஹை என்று மூன்று ஸ்தாயிகள் உண்டு ! இதில், எந்த இசைக்கருவியை, எந்த ஸ்கேலுக்கு, எந்த ஸ்தாயியில் இசைத்தால் காதுகளுக்கு சுகமாக இருக்கும் என்னும் கணக்கில் இளையராஜா கரை கண்டிருந்தார் ! துணிந்து புதுமைகள் பல செய்தார் !
ஒரு பக்கா நாட்டுப்புறப் பாடலை ட்யூன் செய்து, அதற்குப் பின்னணியாக அஃமார்க் வெஸ்டர்ன் ஸ்கோர் செய்து வைத்திருப்பார். ஆனால், அது நம் காதுகளுக்கு கொஞ்சம் கூட உறுத்தாமல்… இரண்டும் பின்னிப் பிணைந்தபடி நம்மை அலாக்காகத் தூக்கிச் கென்று, பச்சைபசேலென அசைந்தாடும் வயல்வெளிகளில் உலாவ விட்டுக் கொண்டிருக்கும் !
பதினாறு வயதினிலே படத்தில் அமைந்த…. “செந்தூரப் பூவே….செந்தூரப் பூவே….” பாடல் சிறந்த உதாரணம் ! இதில், பாடல் தோறும் “பாஸ் கிடார்” செய்யும் ஜாலம் நம்மை வேறு ஒரு உலகத்துக்கு இட்டு சென்றுவிடும் !
மட்டுமல்ல, “கரையெல்லாம் செண்பகப்பூ” படத்தில் அமைந்த “ஏரியிலே இலந்த மரம், தங்கச்சி வெச்ச மரம்…” இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் !
மேஜிக்….மேஜிக்…பரிபூரணமான இசை மேஜிக்…..அதுதான் இளையராஜா !
இவ்வாறானதொரு சாதனையைப் படைக்க வேண்டுமென்றால், அந்த மனிதன் தன்னை பரிபூரணமாக அந்தக் கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டால் தான் உண்டு. சதா சர்வ நேரமும் இசைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தால் தான் உண்டு !
சக மானுடர்கள் எல்லாம் கண் மண் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கும் இந்த அவசரமான நகர வாழ்க்கையில், “அந்த ஒரு மனிதன்” மட்டும் ஏன் இப்படி “இசை, இசை…” என்று இருக்க வேண்டும்..?
ஆழம் காண முடியாதது என்று தெரிந்தும் கூட, இசை மாங்கடலில் ஏன் விழி விரிய, விரிய முங்கி முங்கி ஆழம் போய்க் கொண்டே இருக்க வேண்டும்…?
சொடக்குப் பொட்டால் எல்லாமும் கிடைத்துவிடக் கூடியதொரு துறையில் இருந்தவர் இளையராஜா ! ஆயினும், இசையைத் தவிர வேறெதையும் “போகம்” செய்ய விரும்பாமல், ஏன்… தன் சிந்தனையை இப்படிக் கிறங்கக் கொடுக்க வேண்டும்..?
அது அப்படித்தான் ! அது, விதிக்கப்பட்டது !! அதை பரிபூரணமாக தன் வாழ்க்கைப் பயனாய் ஏற்றுக் கொண்டவர் இளையராஜா !
அதனால்தான், இளையராஜாவின் மேன்மையை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.வி.கோபால கிருஷ்ணன் போன்ற மூத்த கர்நாடக இசை மேதைகள் எல்லாம் வியந்து, வாழ்த்தி அங்கீகரித்தார்கள் !
மேலும், கர்நாடக இசைக்கு “பஞ்சமுகி” என்னும் ஓர் புதிய ராகத்தையும் சிருஷ்டித்து அளித்துள்ளார் இளையராஜா !
குறித்துக் கொள்ளுங்கள்…
கர்நாடக இசையுலகம் என்பது மிகவும் கட்டுப்பெட்டியானது என்பதை விட கட்டுக் கோப்பானது என்று சொல்லலாம் ! விவகாரம் மிக்கது ! யாரும், புதிய ராகம் ஒன்றை படைக்கிறேன் என்று சொன்னால் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. அங்கே சங்கீதத்தை ஸ்வாசிக்கிறவர்கள் நிரம்பவே உண்டு !
அப்படிப்பட்ட கர்நாடக இசையுலகம், இளைய ராஜா படைத்தளித்த “பஞ்சமுகி” என்னும் புது ராகத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது !
“விமர்சன சிம்மம்” என்று எல்லோரும் அஞ்சுகின்ற, புகழ்பெற்ற கர்நாடக இசை விமர்சகர் காலஞ்சென்ற சுப்புடு அவர்கள் கூட, “ நமது சங்கீத மரபின் வேலியைத் தாண்டாமல், இளையராஜா செய்யும் அற்புதங்கள் என்னை வியக்க வைக்கின்றன” என்று வியந்து போற்றியுள்ளார்.
வழக்கமாக அவரை “இசைஞானி” என்றுதானே எல்லோரும் அழைப்பார்கள் !? இந்தக் கட்டுரை யில் ஏன் அவரை “மகாஞானி” என்று விளிக்கிறோம் என்றால்… தன் இசைப் பயணத்தின் ஓர் கட்டத்தில் அவர் எடுத்த அந்த முடிவே காரணமாகும் !
ஆம்,
இளையராஜா, திரையிசையின் உச்சத்தைத் தொட்ட நேரம் அது ! எங்கும் அவரே ! எங்கெங்கும் அவர் இசையே ! அவரது இசைக்கு ஈடு இணை வேறொன்றில்லை – மாற்று இல்லை – அவரைப் போல் இசை கொண்டு மயக்குபவர் இன்னொருவர் இல்லவே இல்லை என்று ஊருலகமே கொண்டாடிய தருணம் அது !
வழக்கமாக, இப்படி ஒரு புகழைப் படைத்துவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தன்னளவில் நிலைகுலைந்து போவது வழக்கம் !
சோம பானம் – சுராபானம் இத்யாதிகள் என தன் வசமிழந்து போன கதைகளோடு வரலாறு தோறும் நாம் பலரைப் பார்க்க முடியும் !
ஆனால், அது போன்றதொரு தருணத்தில்தான் இளையராஜா என்னும் நம் “மகாஞானி”, யாரும் எதிர்பாராத படிக்கு “ஆன்மீகத்தின் பக்கம்” திரும்பினார் !
கொல்லூர் மூகாம்பிகே – ரமண மகரிஷி என புண்ணிய க்க்ஷேத்திரங்களைத் தேடித் தேடிச் சென்று, ஆவி கசிந்து உருகினார் !
“எனக்கொரு அன்னை; வளர்த்தனள் என்னை அவள் பெயர் மூகாம்பா…” என்று குழைந்து, இழைந்தார் ! “நானொரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ; ஐயனே என் ஐயனே…” என்று தன் ஆணவ மலமழித்து மண்டியிட்டு மன்றாடினார் !
திராவிட மேடைகளில், நாத்திக எள்ளல்கள் ஓங்கி இருந்த காலம் அது ! ஆன்மீகத்தை பேசுபவன் அரை மடையன் என்ற எண்ணம் சமூகத்தில் பரவி நின்ற நேரம் அது ! அந்த நேரத்தில், “ஆம், நான் ஆன்மீகத்துக்குள் இருக்கிறேன்…” என்று துணிந்து வெளிவந்து அறிவித்தவர் இளையராஜா !
“நாமார்க்கும் குடியல்லோம் ; நமனை அஞ்சோம்…” என்றார் ! இந்த விஷயத்தில் இளையராஜாவும் – ரஜினியும் தனித்து நின்றார்கள் என்றே சொல்ல வேண்டும் !!
காரணமே இல்லாமல் ஆன்மீகத்தை இழுத்து வைத்து, அசைத்துப் பார்ப்பதில் பெயர் போன கலைஞர் கருணாநிதி அவர்களின் வாயால், “இசை ஞானி” என்ற பட்டத்தைக் கொடுக்க வைத்த, ஈடு இணையற்ற இசை ஆளுமை இளையராஜா !
அவர் ஆன்மீகத்தை நோக்கி நகர்ந்ததைக் கூட, மேட்டுக் குடியை நோக்கி நகரப் பார்க்கிறார் என்று திசையற்றுப் போன சிலர் விமரிசித்தார்கள் ! ஆனால், அதில் கொஞ்சமும் அர்த்தமில்லை ! மேட்டுக்குடி இசை ஜாம்பவான்களே இளையராஜாவின் இசைக் கோலத்தில் மயங்கி அவரைத் தேடி வரும் போது… அவர் எதற்கு – எதை நோக்கி நகர வேண்டும்..?
அவர் தொடர்ந்து நகர்ந்ததெல்லாம், இன்னும் ஆழம் காணப்படாத இசைக் கடலை நோக்கி…! அதன் உன்னத ஆச்சரியங்களை நோக்கி ! அவரது இசைப்பயணம், இன்னும் பல நூற்றாண்டு சவாலுக்குரியது !
“இன்னும் யாரும் தொடாத அற்புதப் பிரதேசங்களை நான் தொட்டுவிடுவேனா…” என்று விக்கித்து வரும் தாகத்தோடு கூடிய மகா பயணத்தை நோக்கியே இளையராஜா நகர்ந்து கொண்டிருந்தார் ! இருக்கிறார் !
அதனால்தான் அவரை “மகாஞானி” என்று விளித்துப் பெருமை அடைகிறது இந்தக் கட்டுரை !!
நிழல்கள் என்று ஒரு படம் : அதில் “மகா ஞானி” இளையராஜா இசையமைத்து, இசைத் தட்டில் மட்டும் வெளி வந்து, ஆனால் திரைப்படத்தில் வெளிவராததொரு ஈடு இணையற்றப் பாடல் ஒன்று உண்டு !
“தூரத்தில் நான் கண்ட உன் முகம்…” !
மனம் மயக்கும் அந்தப் பாடலில், திரையிசையில் அதிகம் புழக்கமில்லாத ராகமான….“கௌரி மனோஹரி” என்னும் ராகத்தைக் கேட்போருக்கு மூச்சு முட்டும் அளவுக்கு இசைந்து பிழிந்திருப்பார் “மகாஞானி” இளையராஜா !
இதற்கு மேல் “கௌரி மனோஹரி” ராகத்தில் இண்டு – இடுக்கு இருக்குமா என்னும் அளவுக்கு அந்த ராகக் கடலின் ஆழத் தரையினை முட்டி, ஆங்கமர்ந்து அனாயசமாகத் தவமியற்றியிருப்பார் !
அமைதியான நள்ளிரவில், தனிமையில், ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு, அந்தப் பாடலைக் கேட்கும் சுகம் அலாதியானது !! தாயின் கருவறையில் மீண்டும் புகுந்து கொள்ளும் ஏகாந்தத்தை அருள்வது !
“ஹே…..மானிடனே, உனது அவசரமான வாழ்க்கையில், ஏதோ ஒரு ஹிதம் தேடி நீ அலைவதை நானறிவேன் ! இதோ, உனக்கான சொர்க்கக் கதவுகள், ப்ரத்யேகமாக திறக்கப்படுகிறது… ஓடோடி, நுழைந்து கொள்…” என்னும் தேவ அசரீரிக்கு ஈடானது !
(தொடரும்… )