சென்னை: கோயில்களுக்கு சொந்த சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட என்ன தயக்கம்? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக, இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ள சொத்துகள், நிதி மற்றும் நிலங்கள் தொடா்பான விவரங்கள், அறநிலையத் துறையின் உத்தரவுகள், அரசாணைகள், ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என கூறியிருந்தாா்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கோயில் நிலங்கள் தொடா்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தால் அதன்மூலமாக முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது என்று கூறியதுடன், . ஏற்கெனவே வருவாய்த் துறையின் ‘தமிழ்நிலம்’ என்ற இணையதளம் வாயிலாக மாநிலத்தில் உள்ள நிலங்களின் வகைப்பாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் அறியமுடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத் துறை ஏன் தயங்குகிறது?
சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது?
கோயில் சொத்துகளின் விவரங்களை அனைவருக்கும் தெரியும் வண்ணம் வெளியிட்டால், அத்தகைய நிலங்களை வாங்குபவா்கள் எச்சரிக்கையாக இருப்பாா்கள் இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதி,
மனுதாரா் அறநிலையத் துறையின் தணிக்கை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும் என்று கூறுகிறாா். அதனை வெளியிடுவதில் என்ன பிரச்னை உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, , மனுதாரா் கோரியுள்ள அனைத்து விவரங்களும் சட்ட ரீதியான பொது ஆவணங்கள். எனவே, அவற்றை வெளியிடுவதை மறுக்க முடியாது என்று கூறிய நீதிபதி, எந்தெந்த தகவல் பதிவேற்றம் செய்ய முடியாது? எந்தெந்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
https://patrikai.com/cant-build-educational-institutions-shopping-malls-and-wedding-halls-with-temple-funds-hc-chennai-quashed-tamil-nadu-governments-order/