மதுரை,

ந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று டி.ராஜேந்தர் கூறினார். மேலும், இதுவரை தமிழ் நடிகர்கள் யாரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏன் போராட வில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இன்று மதுரை வந்த ராஜேந்தர், மதுரை அவனியாபுரம் அய்யனார் கோவிலில்  வழிபாடு நடத்தினார். பின்னர்  ஜல்லிக்கட்டை நடத்திட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பேசினார்.

அப்போது, அவர்  தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றியும், அதன் பாரம்பரி யத்தையும், தமிழ் கலாச்சாரம் பற்றியும்  கூறினார். மேலும்  தமிழகத்தில் மதுரையில் மட்டுமே உண்மையான மாடுபிடி வீரர்கள் உள்ளதாகவும்  கூறினார்.

ஜல்லிகட்டு போட்டியை நடத்துவதில் மத்திய மாநில அரசுகள்  மெத்தனப் போக்குடன் உள்ளதாக குற்றச்சாட்டினார்.

இந்த ஆண்டு தமிழகத்தில் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து திருமங்கலம் அருகே கரடிகல்லில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  டி.ராஜேந்தர் பேசும் போது,

தமிழர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதால்தான் போராட்டத்தின் வாயிலாக ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி போராடி வருவதாக கூறினார்.  மக்களுக்கு கோபம் வந்தால் எதையும் சந்திக்கும் தைரியம் தமிழர்களுக்கு உள்ளது என்றும் எச்சரித்தார்.

மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து இதுவரை எந்தவொரு தமிழ் நடிகரும் ஏன் போராட முன்வரவில்லை என்று  கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட போதிய அழுத்தம் தரவில்லை எனவும் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.

இவ்வாறு அவர் பேசினார்

பழம்பெரும் நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி உள்பட நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற நடிகர்களும் தமது படங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற காட்சிகளில் நடித்து புகழ்பெற்றிருந்தும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.