மதுரை:

பொள்ளாச்சி பாலியல் தொடர்பான செய்திகளுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்க வில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்து உள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக வக்கிர புத்தி கொண்ட ஒரு கும்பல் பல   கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளிடம் சமூக வலைதளங்கள் மூலம் நட்பை ஏற்படுத்தி, ஆசை வார்த்தை கூறி, தனியாக வரவழைத்து, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொடுமை படுத்த, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த செய்தி சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பாலியல் கும்பலிடம்  சிக்கி சீரழிந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர மற்றும் கேவலமான செயலுக்கு முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை  எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சம்பாசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீது  நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது,  மத்திய அரசு கஜா புயல் பாதிப்பிற்கு வழங்கிய நிவாரணத்தில், மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபாடுகள் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும்,  நகர்புற பாதிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், அழுத்தமும் ஊரக பகுதிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்றுகூறிய நீதிபதிகள், இதுபோன்ற தகவல்களை வெளியிடாமல்,  தேசிய ஊடகங்கள் ஊரக பகுதிகளை புறக்கணிப்பதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், பாலியல் தொடர்பாக, தலைநகர் டெல்லியில் நிர்பயாவிற்கு தேசிய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம்,, பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.