சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் டிஜிபி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
முதல்வர் பாதுகாப்புப் பணியில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, மேலதிகாரியான சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் பூதாகாரமாக வெளியான நிலையில், இதுதொடர்வாக நீதிமன்றமும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து, பாலியல் தொல்லை குறித்து சிறப்பு டிஜிபிமீது, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டம் 2013-ன்படி (மத்திய சட்டம் 14 முதல் 2013) இந்தக் குழு தேவையான அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் டிஜிபி மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அதைத்தொடர்ந்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.