சென்னை: மத்தியஅரசு நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

பாலியல் வன்கொடுமையால் இறந்த இளம்பெண் நிர்பயா பெயரில் மத்தியஅரசு, மாநிலங்களுக்கு  நிதி வழங்கி வருகிறது. இந்த நிதியானது, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, ஆரம்பக் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த திட்டத்தின்படி, தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில், பெண்களின் பாதுகாப்புக்கு தமிழகஅரசு ரூ.6 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. எஞ்சிய பணத்தை மத்தியஅரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு, இருப்பில் உள்ள நிதி எவ்வளவு? அந்த தொகை எப்படி செலவிடப்பட்டது? நிர்பயா நிதியை ஏன் முழுமையாக பயன்படுத்தவில்லை? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், இது தொடர்பாக 4 வாரங்களை பதில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.