புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மிகவும் தேவையான சூழலிலும்கூட, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சில ஓவர்கள்கூட, கேப்டன் விராத் கோலி தராமல் விட்டது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இங்கிலாந்து தரப்பில் 6 பெளலர்கள் பயன்படுத்தப்படும்போது, ஐபிஎல் போட்டிக்காக ஹர்திக் பாண்ட்யாவை எதற்காக பாதுகாக்க வேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு, உடல்ரீதியாக அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அவரின் உடல்நலனைப் பேண வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே, அவருக்கு ஓவர்கள் கொடுக்கவில்லை” என்றுள்ளார் விராத் கோலி.
ஆனால், அவரின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கருணால் பாண்ட்யா வீசிய 6 ஓவர்களில் 72 ரன்கள் குவிக்கப்பட்டபோது, அணியைக் காப்பாற்ற, சில ஓவர்களாவது ஹர்திக் பாண்ட்யாவிற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விமர்சிக்கப்படுகிறது.
முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளதாவது, “அடுத்த சில மாதங்களுக்கு எந்த சர்வதேச ஒருநாள் போட்டியும் இந்தியாவிற்கு இல்லை. எனவே, ஹர்திக் பாண்ட்யாவிற்கு சுமை என்று கூறுவதை ஏற்க முடியாது. 50 ஓவர்கள் பீல்டிங் செய்வதுகூட சுமைதான். எனவே, சில ஓவர்கள் பெளலிங் செய்வதென்பது எந்த பெரிய மோசமான விளைவையும் ஏற்படுத்திவிடாது” என்ற காட்டமாக விமர்சித்துள்ளார் சேவாக்.