அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நியாங் பெர்டின் என்ற சட்டக் கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் டெல்லியிலுள்ள ஜும்மா மசூதிக்கு சுற்றுலா வந்திருக்கிறார். மொபைல் போனுடன் உள்ளே நுழைவதற்கு 300 ரூபாய் அவரிடம் கட்டணம் கேட்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் மற்ற இந்தியர்கள் சர்வ சாதாரணமாக தங்கள் மொபைலுடன் உள்ளே சென்றவண்ணம் இருக்க, நாங்களும் இந்தியர்கள்தான் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அங்கிருந்த ஊழியர்கள் செவிமடுக்ககாததால் கோபமடைந்த மாணவி தாங்கள் இந்தியர்களாகவே மதிக்கப்படுவதில்லை என்ற குமுறலை தனது முகநூலில் வெளியிட பிரச்சனை மத்திய உள்துறை அமைச்சகம் வரை சென்றுவிட்டது.
இதுபற்றி நியாங் பெர்டின் கூறுகையில், எங்களுக்கு 300 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்துவது பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் மற்ற இந்தியர்கள் சர்வசாதாரணமாக கட்டணமின்றி உள்ளே செல்ல இந்நாட்டு குடிமக்களாகிய எங்களுக்கும் அந்த உரிமை இல்லையா? இது போன்ற பிரச்சனைகளை வடகிழக்கு மாநிலங்களிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் எங்கள் மக்கள் எல்லோரும் அனுபவித்து வருகின்றனர். இதனால் நாங்கள் போகுமிடமெல்லாம் நாங்களும் இந்தியர்கள்தான் என்பதைக் காட்ட எங்கள் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டியதிருக்கிறது. இது மிகவும் கொடுமை என்று கொதித்துள்ளார்.
இப்பிரச்சனை மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூவின் காதுகளுக்கு செல்லவே அவர் “உள்துறை அமைச்சகம் வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிரான இந்த பாகுபாட்டை தடுக்க எவ்வளவோ முயன்றும் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து விடுகின்றன. இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.