டில்லி:
வரும் 2017-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அபுதாபி இளவரசர் சுல்தான் அல்-நகியானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 2006-இல் சவுதி மன்னருக்கும், 2013-இல் ஓமன் மன்னருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது ஓமன் மன்னருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக பூட்டான் மன்னர் கலந்துகொண்டார்.
இந்தியாவின் விருந்தாளிகளாக அடிக்கடி அரபு நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படுவது ஏன் என்பதைக் காண்போம்.
வளைகுடா நாடுகளில் 7 மில்லியன் இந்தியர்கள் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டில் இந்தியா வளைகுடா நாடுகளுக்கு 41.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெருமான பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டில் வளைகுடா நாடுகளுடன் நடந்த மொத்த வணிகம் 97.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்தியாவின் எரிபொருள் தேவையை தீர்த்து வைப்பது வளைகுடா நாடுகள்தான். இந்தியா எடுக்கும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வளைகுடாவின் அரபுநாடுகள் எப்போதும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்தியா வளைகுடா நாடுகளோடு கொண்டிருக்கும் நட்புறவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும்.