புதுடெல்லி: பாலிவுட் பிரபலம் ஹேமாமாலினி மற்றும் அவரின் வளர்ப்பு மகனும், பாலிவுட் நட்சத்திரமுமான சன்னி தியோல் ஆகிய இருவரும் இத்தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் அருகருகே அமர முடியாத நிலை உள்ளது.
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, புதிதாக முதல்முறை தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, பொதுவாக கடைசி வரிசைகளில்தான் இடம் ஒதுக்கப்படுவது மரபு. ஹேமாமாலினி தற்போது இரண்டாவது முறையாக உத்திரப்பிரதேசத்தின் மதுரா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு நடுவரிசைகளில் இடம் ஒதுக்க வாய்ப்புள்ளது.
இந்தமுறை, புதிதாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபலங்களில், சன்னி தியோல், கவுதம் கம்பீர், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், சாத்வி பிரக்யா தாகூர், ரவி கிஷான், மிமி சக்ரோபோர்தி மற்றும் நுஸ்ரத் ஜஹான் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் தங்களுடைய முந்தைய துறைகளில் அனுபவமும், புகழும் வாய்ந்தவர்கள் என்றாலும், அரசியலுக்கு புதியவர்கள் என்பதால், இவர்களுக்கு கடைசி வரிசைகளில்தான் இடம் வழங்கப்படும்.
இந்த மக்களவையில் மட்டும் மொத்தமாக 300 பேர் புதுமுகங்கள். புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜுன் 6ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.