புதுடெல்லி:

இந்தியாவில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில் புற்றுநோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது;

அமெரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான் புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. குறிப்பாக உயர் வருவாய் பிரிவினர் வாழும் நாடுகளிலும் புற்றுநோய் அதிகம் உள்ளது.

அமெரிக்காவைப் பொருத்தவரை, மூன்றில் ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை, இது குறைவுதான்.
1990 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் இரு நாடுகளையும் ஒப்பிடும்போது, புற்று நோயால் இறப்பவர்களின் விகிதம் அமெரிக்காவை விட இந்தியாவில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

மேற்கத்திய உணவு முறைகளே இத்தகைய புற்றுநோய்க்கும், அதனால் ஏற்படும் மரணத்துக்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது.

சிவப்பு இறைச்சி சாப்பிடுபவர்களை விட, புகைப் பழக்கத்துக்கு ஆட்பட்டவர்களுக்குத்தான் இந்தியாவில் அதிகம் புற்றுநோய் ஏற்படுகிறது.
புற்றுநோய்க்கும் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு இருப்பதையே இது காட்டுகிறது.

அடிப்படையில் புற்றுநோய் என்பது, பரம்பரை தொற்றாகவே கருதப்படுகிறது.
இந்தியாவில் தனி நபர் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. கடந்த 1950-70 வரையிலான காலக்கட்டத்தை ஒப்பிடும்போது, தற்போது சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வந்துள்ளது.

பல தொற்று நோய்கள் இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதே இதற்குக் காரணம்.
சொட்டு மருந்து முகாம்கள் நடத்தி வெற்றிகரமாக போலியோ விரட்டப்பட்டிருக்கிறது.

எனினும்,புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்கு இந்தியா அதிக அளவு முதலீடு செய்யாவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

புற்றுநோயை கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளித்ததின் மூலம் மேற்கத்திய நாடுகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமானோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

சீனா போல் இந்தியாவும் அதிக முதலீடு செய்து, புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.

இதன்மூலம் ஏராளமான புற்றுநோயாளிகளை குணப்படுத்த முடியும். லட்சக்கணக்கில் வரி செலுத்துவோரின் பணத்தை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

இந்தியாவில் அதிகரித்து வரும் புற்றுநோய் சுமையை குறைக்க, மத்திய அரசும், விஞ்ஞானிகளும் முயற்சிக்க வேண்டும். அதற்கான காலமும் தற்போது கனிந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.